திருவொற்றியூரில் 24 குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் நிதிஉதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 24 வீடுகளைக்கொண்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இன்று காலை திடீரென இடிந்த விழுந்தது. இதில் வசித்தவர்கள், நேற்றே வீடுகளை காலி செய்ததால், உயிரிழப்பு தடுக்கப்பட்டது. இருந்தாலும், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து விவரம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஒவ்வொரு வீட்டினருக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழகஅரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
”திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். விபத்தில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்றுக் குடியிருப்புகள் வழங்கவும் அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்”. இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.