
தெலங்கானாவில் நடைபெற்ற சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 2 பொறியாளர்கள் உள்பட 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக சுரங்கப்பாதையில் இருபுறமும் இருந்து துளையிடும் இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது கடந்த வாரம் ஏற்பட்ட மண் சரிவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த திட்ட பொறியாளர் மனோஜ் குமார், களப்பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஊழியர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா ஜெஸ். சந்தோஷ் சாகு, அனுஜ் சாகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆபரேட்டர் சன்னி சிங், பஞ்சாபைச் சேர்ந்த ஆபரேட்டர் குர்பிரீத் சிங் ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து மீட்புபணிகள் துரிதப்பட்டன. ஆனால், உள்ளே சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ராணுவம், கடற்படை கமாண்டோக்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் 2023-ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவைச் சேர்ந்த 6 வீரர்கள் தெலங்கானா சுரங்கத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மற்றும் எண்டோஸ்கோபி கருவிகள் வரவழைக்கப்பட்டன. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த மோப்ப நாய்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 3 பேரும் இடிபாடுகளில் உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.அதிநவீன சிறிய ரக டிரோன் மூலம் 8 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த இரண்டு பொறியாளர்கள், 6 பேர் தொழிலாளர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்..
