• Tue. May 30th, 2023

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் அதிர்ச்சி அளிக்கிறது-தொல்.திருமாவளவன் பேட்டி

ByKalamegam Viswanathan

Apr 30, 2023

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை. -தொல்.திருமாவளவன் பேட்டி
மதுரையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

தொழிலாளர் நலன்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தொழிற்சங்க தலைவர்களின் உணர்வுகளை மதித்து, அரசியல் கட்சித் தலைவர்களின் உணர்வுகளை மதித்தும் முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். முதல்வரின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்று பாராட்டுகிறோம். இந்திய ஒன்றிய அரசு தொழிலாளர் நலன் குறித்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக தொகுத்துள்ளன. அந்தத் தொகுப்பு சட்டத்தில் தொழிலாளர் நலன்களுக்கு எதிராக உள்ள பகுதிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு முன்னதாக ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நாளை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இலக்காக வைத்து அங்குள்ள தமிழர்களிடையே விசிக சார்பாக வாக்கு சேகரிக்க உள்ளேன். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவக்குமார் முறைப்படி கடிதம் எழுதி இருக்கிறார் அதன் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறேன். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை மையமாக வைத்து பாஜக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை குறிவைத்து மதத்தின் அடிப்படையில் விருப்பு அரசியலை விதைத்து வருகிறது. அதை அவர்கள் ஒரு களமாக பயன்படுத்துகின்றனர். எனவே கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவது தென் மாநிலங்களில் நலன்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் மக்கள் அந்த முடிவில் இருக்கிறார்கள் என்றாலும் பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான களத்தில் காங்கிரஸ் ஓடு விடுதலை சிறுத்தைகள் கை கோர்கிறது.

தெலுங்கானா முதல்வர் கே.சி.ராவ் புதிதாக கட்டி எழுப்பியிருக்கிற தலைமைச் செயலகத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைச் சூட்டி இருக்கிறார். எனவே கே.சி.இராவ் அவர்களுக்கு மீண்டும் எங்களின் பாராட்டுகளையும் நன்றியையும் உருத்தாக்குகிறோம். ஏற்கனவே 125 அடி உயரத்தில் வெண்கல திருவள்ளுவர் சிலையை ஹைதராபாத்தில் திறந்து நாட்டுக்கு வழிகாட்டி இருக்கிறார். இந்திய மாநிலங்களிலேயே தெலுங்கானாவில் புரட்சியாளர் அம்பேத்கரின் கோட்பாடுகளுக்கு வலிமை சேர்க்கக் கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் மனமார வரவேற்று பாராட்டுகிறோம்.

கர்நாடகாவில் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு:

இதற்கு அண்ணாமலை தான் பதில் சொல்ல வேண்டும் அவர் இருக்கும்போதே தமிழ் தாய் வாழ்த்து பாடக்கூடாது என ஈஸ்வரப்பா என்பவர் இடைமறித்து அதை நிறுத்தியுள்ளார். கன்னட வாழ்த்து பாடலை பாடச் சொல்வது அவர்களுக்கான உரிமை. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஒரு பகுதியில், ஒட்டுமொத்த தமிழ் வாக்காளர்களையும் அவமதிக்கக் கூடிய வகையில் அவர் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

புதிதாக தானியங்கி மது விற்பனையகம் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு:

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை. மாண்புமிகு முதல்வர் இதை பரிசீலிக்க வேண்டும் படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் திமுக என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில், தேர்தல் வாக்குறுதியிலேயே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முதல்வர் முன்வர வேண்டுமே ஒழிய தானியங்கி எந்திரத்தின் மூலம் மது வகைகளை பிற வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்படுவது அல்ல.

பிரதமர் மோடியின் நூறாவது மன் கி வாக் நிகழ்ச்சியை ஒட்டி கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒளிபரப்பப்பட்டது குறித்த கேள்விக்கு:

இது அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று உண்மையான தமிழ் ஒளி மீதான பற்று என்று சொல்ல முடியாது. திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பேசுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதி வைத்து இந்தியில் படிப்பது இவையெல்லாம் அவர்கள் கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று. இந்தியை திணிக்க வேண்டும் என்பதும், சமஸ்கிருதத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான்.

தூத்துக்குடி விஏஓ படுகொலை குறித்த கேள்விக்கு:

இது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய ஒரு சம்பவம். மணல் மாஃபியா கும்பல் விஏஓ கொடூரமாக தாக்கிப்படுகொலை செய்திருக்கிறார்கள். இதை விசிக மிக வன்மையாக கண்டிக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்குவதோடு, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். மணல் மாஃபியா கும்பல் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அரசு சிறப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *