• Thu. Apr 25th, 2024

அகில் கிரியை எம்.எல்.ஏ. பதவியில்
இருந்து நீக்க பா.ஜ.க. கோரிக்கை

ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பா.ஜ.க. கோரிக்கை விடுத்து உள்ளது.

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசும்போது, சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சை கேட்ட சுற்றியிருந்த மக்களும் ஆரவாரம் எழுப்பினர். சிரிப்பொலியும் எழுந்தது. அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மம்தா பானர்ஜி எப்போதும் பழங்குடியினருக்கு எதிரானவர். ஜனாதிபதியாக வர திரவுபதி முர்முவுக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. தற்போது இப்படி நடந்து கொள்கின்றனர். வெட்கக்கேடானது என அமித் மாளவியா கூறியுள்ளார். இதேபோன்று மேற்கு வங்காள பா.ஜ.க. வெளியிட்ட செய்தியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மந்திரியான அகில் கிரி, மகளிர் நலன் துறையை சேர்ந்த மற்றொரு மந்திரியான சஷி பாஞ்சா இருக்கும்போது, ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் என தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி.யான சவுமித்ரா கான் தேசிய மகளிர் ஆணையத்துக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், அகில் கிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும். கிரிக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவரை நீக்க முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *