• Sat. Feb 15th, 2025

சென்னையில் கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்

ByIyamadurai

Feb 4, 2025

சென்னையில் இன்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

சென்னையில் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியில் இன்று காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அத்துடன் எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழுவு இருந்ததால், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பனிமூட்டத்தால் 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல் பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.