குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப் பணிகளுக்கு உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் மீட்புப் பணிகளின்போது உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது
இதுகுறித்து இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘குன்னூர் அருகே நிகழ்ந்த துரதிருஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்பு மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை காக்கும் பணிகளின் போது, தக்க மற்றும் தேவையான உதவிகளை செய்து கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அலுவலக ஊழியர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், காட்டேரி கிராம மக்கள் அனைவருக்கும் இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.