தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் சொத்த வரி விகிதங்களை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில், சொத்து வரி விகிதம் சென்னையில் 150% ஆகவும், தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி, நகராட்சிகளில் 50% முதல் 100% ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
தமிழக அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் சொத்த வரியை உயர்த்தி அறிவித்ததற்கு எதிர்க்கட்சியான அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஏப்ரல் 5ம் தேதி அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து வரி உயர்வு என்ற ஈர்வு இரக்கமற்ற அறிவிப்பால், தமிழ்நாட்டு மக்களை மென்மேலும் வஞ்சிப்பதா? மக்களைச் சுரண்டும் மனிதாபிமானமற்ற திமுக அரசின் சொத்து வரி உயர்வுகு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்தும்; சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் 05.04.2022 செவ்வாய்க்கிழமை வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், மேலும் கூறியிருப்பதாவது: ‘
பொழுது விடிந்து பொழுதுபோனால் திமுக அரசு மக்களை துன்புறுத்தும் செயல்கள் எதையேனும் செய்துகொண்டே இருக்கிறது. ‘விடியல் அரசு’ என்று பெயர் சூட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக-வின் இருள் சூழ்ந்த ஆட்சி மக்கள் மீது சுமைகளை ஏற்றிகொண்டே செல்கிறது.
எத்தனை பொருளாதார நெருக்கடிகள் வந்தபோதும், அம்மாவின் அரசு ஏழை, எளிய உழைக்கும் மக்களின் நலன்களைக் காப்பாற்றவும், அவர்களை சமூகத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவும் மேற்கொண்ட திட்டங்கள் ஏராளம். அந்தத் திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக திமுக அரசு சீர்குலைத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் போன்ற புரட்சிகரமான திட்டங்களை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் சொத்து வரி உயர்வு போன்ற கடுமையான நடவடிக்கைகளை மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்று தனது தேர்தல் அறிக்கையில் எண் 487-ஆவது வாக்குறுதியாக மக்களுக்கு உறுதி அளித்த திமுக கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மக்கள் மீள முடியாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகம் ஆகும்.
சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்களிடமும் வணிகப் பெருமக்களிடமும் கருத்துக்களைக் கேட்டு, அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவே அரசின் முடிவு இருக்கும் என்று அதிமுக அப்போதைய அம்மா அரசு திட்டவட்டமாக அறிவித்தது. பொதுமக்கள், வணிகர்கள் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க வல்லுநர் குழு ஒன்றையும் அதிமுக அரசு அமைத்திருந்தது. நம்முடைய கழக ஆட்சியின்போது சொத்து வரி உயர்த்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்து, மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் காப்பாற்றினோம். அதிமுக அரசு அமைத்த வல்லுநர் குழு கடந்த 11 மாதங்களாக நடைபெறும் திமுக ஆட்சியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கருத்துக்களைக் கேட்டதா? எங்கே எப்பொழுது யாரிடம் கருத்துக்கேட்கப்பட்டது? பங்கு கொண்டவர்கள் தெரிவித்த கருத்துக்கள் என்ன என்ற வினாக்களுக்கு அரசு பதில் சொல்லட்டும்.
கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, வருமானம் குறைவு என்று பன்முனை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படும் நகர்ப்புற மக்களின் தலையில் 150 விழுக்காடு சொத்து வரி என்ற சம்மட்டியால் அடித்து, மக்களை நிலை குலையச் செய்திருக்கிறது திமுக அரசு. ஓய்வூதியம் பெறுவோர் தங்களுக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல்படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்போரின் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து வாடகையை உயர்த்துவதும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்துவதும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு, சொத்து வரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 05.04.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட அதிமுக செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் நலனை முன்வைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என்று அறிவித்துள்ளனர்.