• Thu. Apr 25th, 2024

அதிமுக அலுவலக மோதல் வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்!!

Byகாயத்ரி

Aug 25, 2022

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் கல்வீச்சு, அடிதடி, கத்திக்குத்து உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ராயப்பேட்டை தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வருவாய் துறையினர் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர் தலா 200 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *