மதுரை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மதுரை மாநகர மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது, 9 வார்டுகளில் 2 ஆம் இடத்தையும், 37 வார்டுகளில் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது, முறைகேடுகள் செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது, மாநகராட்சி தேர்தலில் 40 வார்டுகளில் நடைபெற்ற வாக்கு பதிவில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 முதல் 6 மணி வரையில் அதிக அளவில் வாக்கு பதிவு நடந்துள்ளது. முறைகேடுகளாக நடைபெற்ற வாக்கு பதிவு குறித்த விபரங்களை சேகரித்து மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி உள்ளோம்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை, மத்திய அரசின் திட்டங்களையே மாநில அரசு மக்களுக்கு வழங்குகிறது, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு பணநாயகம் வென்றுள்ளது, 2024 ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் மதுரையில் போட்டியிடுவோம், பாஜக தனித்து போட்டியிட்டதால் மதுரையில் 14 வார்டுகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு உள்ள நுழைவு தேர்வை போலவே நீட் தேர்வை பார்க்க வேண்டும், நீட் தேர்வுக்காக பள்ளிகளில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்” என கூறினார்.