• Sat. Apr 20th, 2024

அதிமுக வெல்வது நிச்சயம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

தமிழகத்தில் அதிமுகவின் அலை வீசுகின்றது என்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலி்ல் அதிமுக மாபெறும் வெற்றியை பெறும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்..

சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் வாக்கு சேகரிப்பு கூட்டம், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.பலராம் முன்னிலை வகித்தனர். சிவகாசி நகரக் கழக செயலாளர் அசன்பதூரூதீன், திருத்தங்கல் நகர கழக செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், லட்சுமிநாராயணன் வரவேற்புரையாற்றினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா கட்டிக்காத்த இயக்கம் தான், அதிமுக! ஒட்டிய வயிறையும் கிழிந்த சட்டையையும் பார்த்து தொடங்கப்பட்டதுதான் அண்ணா திமுக இயக்கம். சோதனைகள் வரும்போதெல்லாம் சாதனைகளாக்கி தொண்டர்கள் நிரம்பிய இயக்கம்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் முக்கியமான களப்பணிகளை இன்றிலிருந்து ஆற்ற வேண்டியுள்ளது. ஆட்சியில் இல்லை அதிகாரத்தில் இல்லை என்ற போதிலும் தேர்தலில் போட்டி போட்டு போட்டியிடக்கூடிய இயக்கம் அதிமுக. விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக தெம்புடன் உள்ளது! ஒரு அற்புதமான இயக்கத்தை ஓபிஎஸ் – இபிஎஸ் கட்டமைத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் சொல்லும் வழியில் நான் பயணித்து வருகிறேன். அனைத்து வேட்பாளர்களையும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகவும் எண்ணுங்கள். மக்கள் அனைவருக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்கும் எண்ணம் வந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது. சிவகாசி மாநகராட்சியை அதிமுக வெல்வது நிச்சயம்.. ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் மட்டும் தான் மாநகராட்சிகளுக்கு பணம் கிடைக்கும் என்ற எண்ணம் தவறானது மத்திய அரசின் மூலம் ஏராளமான நிதியை பெற முடியும். சிவகாசி மாநகராட்சி வரவேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிகளில் பணிகள் செய்தோம். அதிமுக ஆட்சியில்தான் சிவகாசியை மாநகராட்சியாக மாற்றி அமைக்கப்பட்டது. மாநகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடமும் கட்டி கொடுக்கப்பட்டது. சிவகாசியில் 100 கோடி ரூபாய் அளவில் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.. என்னுடைய முயற்சியால் அதிமுக ஆட்சியில்தான் கொண்டா நகரம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

சிவகாசியில் சுற்றுச் சாலை திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கிடு செய்தது எடப்பாடியார் தான்.. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு பணிகளை தொடங்கி வைத்தவர் எடப்பாடியார்! போன ஆண்டு தை பொங்கலுக்கு பரிசு தொகுப்பு ரூபாய் 2500 வழங்கியது. அண்ணா திமுக அரசு. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த இந்தப் பகுதியில் அதிமுக ஆட்சியில்தான் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. இந்த அரசுக் கல்லூரியில் 2500 ஏழை எளிய மாணவ, மாணவிகள் படிக்கும் அளவிற்கு இந்த கல்லூரியை நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். சிவகாசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை அண்ணா திமுக அரசு உருவாக்கிக் கொடுத்தது. அதன் பயனாக இன்று கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பட்டாசு தொழிலில் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை எங்களது முயற்சியால் 12 சதவீதமாக குறைத்துள்ளோம்! சிவகாசியில் பட்டாசு பயிற்சி மையத்தை உருவாக்கியது அம்மாவுடைய அரசாகும். பட்டாசு விபத்தின் போது பட்டாசு தொழிலை காப்பாற்றும் வகையில் சிவகாசியில் நவீன தீக்காய சிகிச்சை மையத்தை உருவாக்கியது கட்டிக் கொடுத்தது அண்ணா திமுக அரசாங்கம்தான். பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியதும் அண்ணா திமுக அரசுதான். பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் அண்ணா திமுக அரசு தனி வழக்கறிஞரை நியமித்து வாதாடியது.

இதேபோன்று திருத்தங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியது. திருத்தங்கலில் புதிய பஸ் ஸ்டாண்ட் உருவாக்கிக் கொடுத்தது அதிமுக ஆட்சியில்தான். சிவகாசி பஸ் ஸ்டாண்டு விரிவாக்கம் செய்து கொடுத்தது நான்தான்! சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் அளவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக அரசாங்கம்.
திருத்தங்கல் என்றாலே தண்ணீர் பிரச்சனை இருக்கும் அதனால் பெண் கொடுக்க தயங்குவார்கள் ஆனால் தற்போது அனைத்து பகுதியிலும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.

அனைத்து வேட்பாளர்களும் பக்குவமாக ஓட்டு கேளுங்கள்! யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் அதிமுக சாதனைகளை மட்டுமே கூறி வாக்கு கேளுங்கள் என்று பேசினார்.. கூட்டத்தில் கழக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப மதுரை மண்டல இணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் தெய்வம், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பிலிப்வாசு, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், சிவகாசி மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *