• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம்

ByKalamegam Viswanathan

Mar 31, 2026

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வில், இந்தியா முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

உலகளவில் புகழ் பெற்ற ஐ.வி.எஃப் நிபுணர் கௌதம் அல்லாபாடியா, மெடிஸ்கேன் நிறுவனர் டாக்டர் சுரேஷ் சேஷாத்ரி மற்றும் மூத்த நிபுணர் டாக்டர் கௌரிசங்கர் பரமசிவம், வாணி புஜாரி, அபூர்வா பல்லம் ரெட்டி, ரமணி தேவி, சுதர்சன் மற்றும் பிஜாய் பாலகிருஷ்ணன் உட்பட பல மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

புளூம்லைஃப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் கவிதா கௌதம், ​”மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது மிக அவசியம். நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆர்வமே இதுபோன்ற மாநாடுகளை நடத்தத் தூண்டுகிறது. 2018-ல் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, இன்று ஒரு சர்வதேச தளமாக உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” எனத் தெரிவித்தார்.

​நிகழ்வில், நவீன செயற்கை கருத்தரிப்பு மற்றும் கருவில் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வரங்கங்கள் நடத்தப்பட்டன. செயற்கை கருத்தரிப்பு, கருவில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிநவீன மாற்றங்களை மருத்துவர்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய மருத்துவ நிபுணர்கள், கருத்தரிப்பு சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்பும் மகத்தானதாக இருக்கப் போகிறது. கருவை உருவாக்குவதில் ஆணின் உயிரணுக்களை தேர்வு செய்வதில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மருத்துவத் துறையில் அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கலாம் என்றனர்.

நீண்ட காலக் கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு கருவுறுதலில் ஏற்படுத்தும் தாக்கம், குறைந்த மருந்துகள் மற்றும் நோயாளிக்கு அதிக அசௌகரியம் இல்லாத நவீன ‘மினி ஐ.வி.எஃப்.,’ முறைகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கிப் பேசினர். நவீன ஸ்கேனிங் முறைகள் மற்றும் கருமாற்றம் குறித்த பயிற்சிகளை மருத்துவர்கள் மாதிரி கருவிகள் மூலம் நேரடியாகச் செய்து பார்த்தனர்.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கவிதா கௌதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.