• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் – நடிகர் கார்த்தி

Byதன பாலன்

Jan 26, 2023

சினிமாவில் சம்பாதிப்பதை விவசாயத்தில் திரைத்துறையினர் முதலீடாக செய்வது இல்லை அப்படியே செய்தாலும் பண்ணைவீடு,பொழுதுபோக்க விவசாயம் செய்கிறேன் என திரைக்கலைஞர்கள் கடந்த காலங்களில் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள் விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் உணவுப் பொருட்கள் நஞ்சாக மாறி வருகிறது. இதனால் ரசாயன உரங்கள் பயன்படுத்தபடாதஇயற்கை விவசாயம், அதன் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் மீது மக்கள் கவனம் திரும்பியுள்ளது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அதில் ஈடுபடுவோர், சாதனை நிகழ்த்துபவர்களை கண்டறிந்து வருடம் ஒரு முறை
உழவன் அறக்கட்டளை அமைப்பின் மூலம் விருது வழங்கிவருகிறார் நடிகர் கார்த்தி அதற்கான விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடைபெற்றது விழாவில் பங்கேற்று நடிகர் கார்த்தி பேசியதாவது
சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்து தான் இதை வழிநடத்தி செல்கிறார்கள். ராஜ்கிரன் ஐயா, பொன்வண்ணன் சார் மற்றும் பாண்டிராஜ் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க போவதில்லை. ஏனென்றால், என்னுடைய சிந்தனையில் பாதியைக் கொண்டவர்கள்.
இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்வதில்லை. எந்த விஷயங்களையும் நாம் தேடி தெரிந்து கொள்வதும் இல்லை. தினேஷ்-ன் நவீன உழவனை பின்பற்றுபவர்களுக்கு நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். உழவன் அறக்கட்டளை தொடங்கிய புதிதில் விவசாயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாமும் செய்யலாம் என்று நினைத்தேன். அச்சமயத்தில் என்னை நிறைய விழாக்களுக்கு அழைத்திருந்தார்கள். குறிப்பிட்ட விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த போது, விவசாயம் சார்ந்த பெர்னாட்ஷா மற்றும் ஆண்டனி தாஸ் இவர்கள் 30, 40 வருடங்களாக விவசாயம் செய்கின்றவர்களை அழைத்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வரும்போது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இவர்கள் தானே நம்முடைய நாயகர்கள்? இவர்களை ஏன் நாம் அடையாளப்படுத்தவில்லை? இவர்கள் ஏன் சமூகத்திற்கு தெரியவில்லை? எனக்கு எப்படி இவர்களைத் தெரியாமல் இருந்தது? என்று கூச்சமாகவே இருந்தது.
உழவன் அறக்கட்டளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும் போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால், சின்ன சின்ன ஊர்களில் எதையும் எதிர்பார்க்காமல் அதிசயங்கள் நிகழ்த்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பரிசுக்காகவும், நாம் அழைத்து பாராட்டுவதற்கும் செய்யவில்லை. இது அத்தியாவசியம், சமூகத்திற்கு முக்கியம், நம் எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்று தங்களுடைய முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்கள் கணக்கிடமுடியாத அளவிற்கு இருக்கிறார்கள். இவர்களை அந்த ஊரில் உள்ளவர்கள் கூட மதிப்பார்களா? என்று தெரியாது. அப்படிபட்டவர்களை அழைத்து வந்து நமது குழந்தைகளுக்கு, இவர்கள் தான் நமது கதாநாயகர்கள், இவர்கள் தான் நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படுபவர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் உழவர் விருதுகளை தொடங்கினோம்.
இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்தால், ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும் என்று கூறுவது போல ஒரு குறிப்பிட்ட விதையை இழந்துவிட்டால் அதை திரும்ப உருவாக்க முடியாது. அப்படிப்பட்ட விதையை 19 வயதில் இருந்து ஒருவர் பாதுகாத்து வருகிறார். இந்த வயதில் வெளிநாடு சென்றோமா, சம்பாதித்து வீடு வாங்கினோமா என்று இல்லாமல், தன் வாழ்க்கை மொத்தமும் சமூகத்திற்காக செலவழிக்கிறார். ஆனால், அந்த சமூகம் நன்றாக இருக்கிறது என்று கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது. யாரோ ஒருவர் பெட்ரோல் போட்டு அனுப்பி வைப்பார்கள் என்று கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது. சுற்றிலும் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள், இதை அகரத்திலும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். டிரெண்டிங்கான விஷயங்களை அனைவரும் எடுத்து செய்யும்போது, தினேஷ் உலர்ந்து போன விஷயமான விவசாயத்தை எடுத்து செய்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிறைய பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது, பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. பெண்கள் விவசாயத்தில் எதுவும் செய்யமுடியாது. பின்தங்கிதான் இருப்பார்கள் என்று இருக்கும் நிலையில், பெண்கள் கூட்டம் சாதித்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. அதிலும் வறண்ட ஒரு பூமியை கடன் வாங்கி குத்தகைக்கு எடுத்து, கிணறு வெட்டி, விவசாயம் செய்து சாதித்த பின், அந்த ஊரே அவர்களை அண்ணார்ந்து பார்க்கிறது என்றால் அது சாதாரண விஷயமில்லை. மிகப் பெரிய சாதனை. அவர்களை ஊக்குவிப்பதற்காகத்தான் இங்கு அழைத்து வந்து பாராட்டினோம். இவர்களைப் போல் உள்ள பலரையும் இந்த பாராட்டு ஊக்குவிக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
சமூகத்தில் இதன் பிரதிபலிப்பு நிச்சயம் இருக்கும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இந்த விழாவை நடத்தி வருகிறோம்.
எங்களை எப்படி தேடிப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. இன்று லண்டன் மற்றும் துபாயில் கடை போட்டிருக்கிறேன் என்று கோத்தகிரியில் இருந்து வந்தவர் கூறினார். விவசாயம் செய்ததால் ஊரில் எனக்கு மரியாதை இருக்காது. ஆனால், இன்று என்னிடம் ஆட்டோகிராப் வாங்கும் அளவிற்கு நட்சத்திரமாகி இருக்கிறேன். எங்கு சென்றாலும் கைத்தட்டல்கள் கிடைக்கிறது என்று கூறுகிறார் ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டிய விழா என்பது புரிகிறது.இது ஒருபுறம் இருக்க, விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் நம்முடைய புரிதல் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முடைய குழந்தைகளுக்கு சாப்பாட்டை வீண் செய்யாதீர்கள் என்று கூறுவோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? இதற்கு முன்பு சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று குழந்தைகளைக் கேட்டால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வருகிறது என்பார்கள். ஆனால், இன்று ஸ்விகி, சொமேட்டோவில் ஆர்டர் செய்தால் வரும் என்கிறார்கள். ஒரு காரை எப்படி தயாரிக்கிறார்கள், ஐஸ்கிரீம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்கிறோம். ஆனால், உணவை எப்படி தயாரிக்கிறார்கள்? என்று சொல்லிக் கொடுக்கிறோமா? பள்ளிகளில் அதற்கான பார்வையிடல் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்க்கிறேன். நான் உமையாளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் விவசாய நிலத்தைச் சுற்றி காண்பித்தேன். பல பள்ளிகள் இன்று அழைத்துச் செல்கிறது. சில பள்ளிகளில் விவசாயத்திற்கென ஒரு வகுப்பை தனியாகவே ஒதுக்குகிறார்கள். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் விவசாய சுற்றுலா கட்டாயமாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு காரை தயாரித்து பாகங்களை சேர்க்க 1 மணி நேரம் போதும். ஆனால், ஒரு நெல் விளைவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாது. உதாரணத்திற்கு தக்காளியை எடுத்துக் கொண்டால், நாற்று நடுவதற்கு 25 நாட்கள் ஆகும். அதுவரை நாற்றுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்று நட்ட பிறகு பூ பூத்து காய்க்கும் வரை தண்ணீர் சரியாக விட வேண்டும். பூச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை அதிகமாகவும் வரக் கூடாது, குறைவாகவும் வரக் கூடாது. இதையெல்லாம் தாண்டி தக்காளி சந்தைக்கு வருகிறது. இங்கு வெங்காயம், தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைதான். ஆனால், என்றோ ஒரு நாள் தக்காளி விலை ஏறிவிட்டால், அன்று அதுதான் முக்கியச் செய்தியாக இருக்கும். உடனே, பெங்களூருவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்துவிடுவார்கள். கிலோ ரூ.100/-க்கு இருந்த விலை ரூ.5/-க்கு வந்துவிடும். அப்போது விவசாயிக்கு எவ்வளவு ரூபாய் போகும் என்று என்றாவது யோசித்து இருக்கிறோமா? நான் யோசிக்கவில்லை என்று எண்ணும்போது எனக்கு வெட்கமாக இருந்தது. இதேதான் அத்தியாவசிய பொருளான பாலுக்கும் வருகிறது.
மாடு வாங்கி பால் கறப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 கிலோ தீவனம் ரூ.50/-. காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுக்க மாடுக்கு எத்தனை வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கிறது. எந்தவொரு சுபநிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது. இப்படி முழு நேர வேலைக்கு வருமானம் சொற்பமாகவே இருக்கிறது. அரசாங்கம் ஒரு லிட்டருக்கு ரூ.27/- என்று நிர்ணயித்திருக்கிறது. தண்ணீர் பாட்டில் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பால் விலையில் ரூ.2/- கூடினாலே கோபப்படுகிறோம். நீங்கள் என்ன சாப்பிட்டாலும் விவசாயிக்கு எவ்வளவு போகிறது என்று யோசியுங்கள் என்ற அந்து சார் கூறுவார். நாம் என்ன வினை புரிகிறோமோ? அதையே தான் அரசாங்கமும் செய்யும். இங்கு விலைவாசி ஏறும் போது எதற்காக ஏற்றப்படுகிறது? அந்த பணம் யாருக்குச் சென்றடைகிறது? பால் வாங்கும் இடத்தில் 2 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டிவந்தால் அந்த செலவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நமக்கு நல்ல பால் கிடைக்கும். நகர்புறங்களில் நல்ல பால் கிடைப்பதில்லை. கலப்படங்கள் சாதாரணமாக நடக்கின்றது. நல்ல பால் வேண்டுமென்றால் நாம் தான் தேடிச் சென்று வாங்க வேண்டும். இந்த சிறிய மாற்றம் எல்லோருக்குள்ளும் வர வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.இப்போது நேரடியாக விவசாயியிடமிருந்து வாங்குவது தொடங்கிவிட்டது. 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைவரும் சேர்ந்து விவசாயக் கூட்டமைப்பிடம் எங்களுக்குத் தேவையான காய்கறிகளை கேட்டால், அவர்கள் செய்துக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி இருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். நமக்கும் நஞ்சில்லாத உணவு கிடைக்கும்.
எங்கு சென்றாலும் நம்மாழ்வார் ஐயாவை பார்த்திருக்கிறோம், அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று அவர் பெயரைத் தான் சொல்கிறார்கள். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நிச்சயமாக நமது கடமை. இப்போது உணவு உற்பத்தி 2 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துகொண்டே வருகிறது என்று கூறுகிறார்கள். ஆடி மாதம் பெய்ய வேண்டிய மழை தள்ளிப் போகிறது. இத்தனை வருட காலமாக இந்த பருவத்தில் விதைத்தால் இந்த பருவத்தில் அறுவடை செய்யலாம் என்ற அறிவு இப்போது வீணாகப் போகிறது. அனைத்தும் காலமாற்றத்தினால் மாறிக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இன்னும் நமக்கு உணவு கிடைக்கிறதென்றால், பாண்டிராஜ் சார் கூறியது போல, விவசாயத்தை விட மாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா? என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம் தான் தயார் செய்தாக வேண்டும். நாங்கள் படத்தில் கூறிய வசனம் போல, மருத்துவராக இரு, பொறியாளராக இரு, கலெக்டராக கூட இரு, ஆனால் விவசாயியாகவும் இரு என்பதுதான். அவரவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது.
இந்த வருடத்தை சிறுதானியத்திற்கான முக்கிய வருடமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறுதானியம் ஏன் அவசியமாக இருக்கிறது? என்றால், அது மானாவாரி பயிர், அதற்கு தண்ணீர் காட்டத் தேவையில்லை, உரம் போட தேவையில்லை, ஹைபிரிட் கிடையாது. அழகாக கையில் கிடைத்துவிடும். இருந்தும் ஏன் பலர் இதை செய்யவில்லையென்றால், அதற்கான செயலாக்கத் திட்டம் சரியாக இல்லை. சிறு கிராமங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் சிறுதானியம் கிடைக்கிறது. ஆனால், அப்படி வருகின்ற சிறுதானியங்கள் அனைத்தும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக கம்பு முறுக்கு, ராகி பிஸ்கட் என்று போய் விடுகிறது. ஆனால், உணவாக உண்ணும்போது தான் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. கடைகளில் கிடைக்கக் கூடிய அனைத்தும் வெள்ளையாக பாலிஷ் செய்து வருகிறது. கம்பு, ராகி அனைத்தும் ஒரே நிறமாக இருக்கிறது. பாலிஷ் செய்தாலே அனைத்து சத்துகளும் போய்விடும். அரை வேக்காட்டில் சாப்பிடுவது மிக மிக அவசியம். அதற்காக செயலாக்கக் கூடம் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருக்கிறது.

விவசாயிகள் அவர்களின் விளைபொருட்களை பாதுகாத்து வைக்கக் கூடிய இடத்தில் சேமித்து வைத்து, விலை ஏறும்போது விற்பதற்கு அரசாங்கம் செயலாக்கக் கூடத்தை வைத்திருக்கிறது. அதுபோல சிறுதானியத்திற்கும் செயலாக்கக் கூடத்தை அதிக எண்ணிக்கையில் நிறுவ வேண்டும். விவசாயிக்கு எளிய வகையில் தேக்கி வைக்க அங்காடிக்கு அருகிலேயே நிறுவ வேண்டும். இப்படி செய்தால் அதிக அளவில் குறைந்த விலையில் சிறுதானியம் கிடைக்கும். அரிசி கிலோ ரூ.60/-க்கு கிடைக்கிறது. ஆனால், சிறுதானியம் ரூ.90/- முதல் ரூ.130/- வரை விற்கிறது. அனைவரும் வாங்கி சாப்பிட முடியும்.

மேலும், விவசாயிகள் அவர்களின் விளைப் பொருட்களை அவர்களே கொண்டு சென்றுதான் சந்தையில் விற்க வேண்டும். அதுவும் 2 மணி நேரத்திற்குள் விற்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள் வீட்டைப் பார்க்க வேண்டும், காட்டைப் பார்க்க வேண்டும், பிற வேலைகளைப் பார்க்க வேண்டும். அவருக்கு பையன் இருந்தால் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். இல்லையென்றால், எல்லாவற்றையும் செய்வதற்கு ஆட்கள் கிடையாது. உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்க போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கிறேன்.

இதுபோன்று, இன்னும் பல திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வருவோம். இந்நிலையில், நீரும் நாமும் என்பது எனக்குப் பிடித்த விஷயம். இதை நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் இதை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். இத்திட்டத்திற்கு பல நண்பர்கள் உதவியாக இருக்கிறார்கள்.
அதேசமயம், அனந்து சார் கூறியது போல சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கேற்ப கருவிகளை வடிவமைக்கும் போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்ற வருடமே முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தாமதமாகி விட்டது. இந்த வருடம் நிச்சயம் நடத்துவோம். இதற்கு அண்ணா பல்கலைக் கழகமும் உடன் இருக்கிறார்கள் என்பதில் மிகப் பெரிய சந்தோஷம். ஏனென்றால், பொறியியலாளர்களால் தான் சுலபமாகவும், எளிமையாக உருவாக்க முடியும்.இங்கு வந்த அனைவருக்கும் நன்றி என்றார்