மதுரை வேளாண்கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஆர்த்திகா, அபிராமி, அபிஷா, அஜ்மியா, அக்ஷயா, அமுதரசி, ஆர்த்தி, ஆஷ்மி ஆகியோர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் கண்காட்சி மாணவிகளால் நடத்தப்பட்டது. இக்கண்காட்சி உதவி வேளாண்மை இயக்குனர் மயில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். இக்கண்காட்சியில் கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, மைசூர் மல்லி, கருங்குறுவை, கொத்தமல்லி சம்பா, கொட்டார சம்பா, பூங்கார் போன்ற பாரம்பரிய நெல் வகைகள், வாளிப்பொறி, பழஈ பொறி, விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி,மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி,நீல வண்ண ஒட்டுப் பொறி போன்ற பூச்சிகளை கவரும் பொறிகள், உயிர் உரங்கள், உயிர் கட்டுப்பாட்டு காரணிகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தேனீ வளர்ப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு,மீன் பண்ணையம், பரண்மேல் ஆடு வளர்ப்பு,சொட்டு நீர் பாசனம், காளான் வளர்ப்பு,பல அடுக்கு பயிர் சாகுபடி போன்றவற்றின் மாதிரிகளும் வைக்கப்பட்டிருந்தது.