பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்ற ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வாலிபர் கூறிய புகாரால் வேல்முருகன் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி
எம்.எல்.ஏவுமான வேல்முருகன் நேற்று மதியம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென அய்வு செய்தார். வார்டு, வார்டாக சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெண் நோயாளி ஒருவரை அழைத்து வந்திருந்த காடாம்புலியூர் பெரியபுறங்கணியை சேர்ந்த சுரேஷ் (வயது 30) என்பவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.விடம் ஓடிவந்து பரபரப்பு புகாரை கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது உறவினரை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். உடனடியாக குளுக்கோஸ் ஏற்ற டாக்டர் அறிவுறுத்தினார். அதன்படி குளுக்கோஸ் ஏற்றும் வார்டுக்கு அவரை அழைத்து வந்தேன். அங்கிருந்த பெண் ஊழியர், ரூ.200 கொடுத்தால்தான் குளுக்கோஸ் ஏற்றுவேன் என்று கூறினார். இதனால் சில மணி நேரம் நான் தயங்கி நின்றேன். அதன்பிறகு வேறுவழியின்றி லஞ்சமாக ரூ.200 கொடுத்தேன். பணம் கொடுத்த பிறகே குளுக்கோஸ் ஏற்றினார்கள். இதேபோல் ஊசி போடுவதற்கும், சில சிகிச்சைகளுக்கும் பணம் வாங்குகிறார்கள். ஏழை, எளிய மக்கள்தான் அரசு ஆஸ்பத்திரியை தேடி வருகிறோம். இங்கேயும் பணம் கேட்டால் நாங்கள் என்ன செய்வது. இது போன்று பணம் வாங்குவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும் என்றார்.
இந்த புகாரை கேட்டதும் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக தலைமை மருத்துவர் மாலினியை அழைத்து வேல்முருகன் எம்.எல்.ஏ. கேட்டார். அப்போது வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறுகையில், பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற வரும் நோயாளிகளிடம் மருத்துவ ஊழியர்கள் பணம் வாங்குவதாக ஏற்கனவே என்னிடம் புகார் வந்தது. அதன் அடிப்படையில்தான் இங்கு ஆய்வு செய்ய வந்தேன். இப்போது இந்த வாலிபரின் புகாரால் அது உண்மை என்று தெரிந்துள்ளது. இனிமேல் யாரும் நோயாளிகளிடம் பணம் வாங்கக்கூடாது. வரும் காலங்களில் இதுபோன்று புகார் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
அதற்கு தலைமை மருத்துவர் மாலினி, இங்கு யாரும் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில்லை. அப்படி யாரேனும் வாங்கி இருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.