விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக இருந்த சிடிஆர்.நிர்மல் குமார் ஆகியோர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைந்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கர் குறித்த நூல் வெளியீடு விழாவில் ஆட்சியில் பங்கு என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் அவர் கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா இன்று வந்தார். அவரை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார். இதே போல அதிமுக ஐடி பிரிவு இணைச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமாரும் தவெக அலுவலகம் வந்திருந்தார். பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு பாஜக தலைமையில் அதிருப்தி தெரிவித்து, 2023 மார்ச் மாதம் அக்கட்சியை விட்டு விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார். அதே போல ஆதவ் அர்ஜுனாவும் தவெகவில் இணைந்தார். இவர்களுடன் அதிமுக உள்பட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்துள்ளனர்.