
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள நடிகரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளது வழக்கில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவரை கடந்த 2017 ஆம் அண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு காரில் கடத்திச் சென்ற சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முதல் கட்டமாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், திலீப்பின் நண்பரும், ஓட்டல் உரிமையாளருமான சரத் நாயரை கேரள காவல்துறை குற்றப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
திரைப்பட இயக்குநர் பாலச்சந்திரகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற திலீப் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படும் நபர் சரத் நாயர் என்று விசாரணைக் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்ததற்காக சரத் நாயர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
