
”குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக என்னை அழித்துவிட வேண்டும் என்பதற்காக, பிரதமர் அலுவலகம் திட்டமிட்டு சதி செய்து வருகிறது,” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி குற்றஞ்சாட்டி உள்ளார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மாநில காங்., – எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி, பா.ஜ., அரசு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.சமீபத்தில், பிரதமர் மோடி குறித்து அவதுாறான கருத்து தெரிவித்த வழக்கில், அவரை அசாம் போலீசார் கைது செய்தனர். மேவானிக்கு அம்மாநில நீதிமன்றம், ‘ஜாமின்’ அளித்தது. அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக, அரசு பணியாளர்களை தாக்கிய வழக்கில், போலீசார் மேவானியை மீண்டும் கைது செய்தனர்.
இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது.இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானி கூறியதாவது: நான் கைது செய்யப்பட்டதற்கு, 56 இன்ச் மார்பளவுள்ளவரின் கோழைத்தனமே காரணம். இது போன்ற செயல்கள் குஜராத்தின் பெருமையை கெடுக்கிறது.குஜராத்தில், 22 தேர்வுகளுக்கான வினாத்தாள், ‘லீக்’ ஆன விவகாரம், முந்த்ரா துறைமுகத்தில் 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.குஜராத்தின் வடகம் பகுதியைச் சேர்ந்த தலித்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினர் மீது போடப்பட்டுள்ள போலி வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், ஜூன் 1ல், குஜராத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக என்னை அழித்துவிட வேண்டும் என, பிரதமர் அலுவலகம் சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதன் காரணமாகவே அசாம் போலீசாரால் நான் கைது செய்யப்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.