• Fri. Apr 19th, 2024

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டிய நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு…

Byகாயத்ரி

Feb 16, 2022

விவசாயிகளின் போராட்டத்தின் போது, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் முன்னேறினர். செங்கோட்டையில் இருந்த கம்பத்தில் விவசாயிகள் கொடி ஏற்றியதில் சர்ச்சையாகி பாதுகாப்புப் படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தில் உடன் இருந்து விவசாயிகளை தூண்டிவிட்டதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் தீப் சித்து 2 முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.போராட்டக் களத்தில் தீப் சித்து இருந்த வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி நாடு முழுவதும் பேசப்பட்டார்.

இந்த நிலையில் இவர் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே குண்ட்லி-மனேசர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டு இருந்த போது, நின்று கொண்டு இருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீப் சித்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. அவருடன் பயணித்த பெண் ஒருவரும் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீப் சித்துவின் மறைவிற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *