• Mon. Nov 4th, 2024

யானை தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை-உதகை ஆட்சியர் பேட்டி

கூடலூர் பகுதியில் யானை தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வருவதை தடுக்க அதில் நவீன தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் உதகையில் பேட்டி
கேரளா வனப்பகுதியில் இருந்து முதுமலை வனப்பகுதிக்கு வரும் காட்டு யானைகளின் வழித்தடமாக ஓவேலி பகுதி இருந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேரை காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இறந்தவரின் உடலை எடுக்காமல் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடலூர் பகுதியில் ஏற்பட்டு வரும் மனித – வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வரும் நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், எதிர்காலத்தில் உயிர் பலியாகமல் இருக்க வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க பிரத்யேக வரைபடம் மூலம் 5 இடங்களில் அதிநவீன தடுப்புகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் எனவும், அதற்க்காக வனத்துறை, காவல்த்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாவும் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், வாட்ஸ்ஆப் மூலம் வதந்திகள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் பேசுகையில் கும்கி யானைகள் மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவது குறித்து வாட்ஸ்ஆப் குழுவில் பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் குழு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் பேசிய அவர் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தற்போது 1 ட்ரோன் கேமிரா உள்ள நிலையில் மேலும் 2 ட்ரோன் கேமிரா வாங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *