முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்களாவில் அதிரடி ரெய்டு ..அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார்.
இந்த நிலையில் டெனால்டு டிரம்ப் தனது பதவி காலம் நிறைவடையும் நிலையில் அதிபர் மாளிகையில் சில ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்று தனது புளோரிடா மாகாணத்தில் உள்ள சொகுசு பங்களாவில் வைத்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த 8-ம் தேதி புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் வீட்டில் எப்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
டிரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய ஆவணங்கள் அடங்கிய 11 பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கைப்பற்றப்பட்டவை ரகசிய ஆவணங்கள் அல்ல என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் உரிய தகவல் தெரிவிக்காமல் தனது வீட்டில் சோதனை நடத்திய விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு எதிராக புளோரிடா நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் நோக்கங்களுக்கானது என்றும் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது வீட்டில் இருந்து கைப்பற்றபட்ட ஆவணங்கள் மீதான நீதித்துறையின் விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.