• Wed. Mar 22nd, 2023

சர்ஜிகல் ஸ்டைரக் நடத்திய சாதனையாளர்..!

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் ராணுவம்தான் எல்லை தாண்டிச் சென்று சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என்றிருந்த நிலையை மாற்றி, இந்திய ராணுவத்துக்கும் அப்படி ஒரு முகம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் விமான விபத்தில் அகால மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத்.

இந்திய ராணுவம் 2015 சூன் மாதம்மிக மோசமான ஒரு பேரிடியை சந்தித்தது. நாகாலாந்து தீவிரவாத அமைப்பு ஒன்று, மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. 18 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தார்கள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாதுகாப்பாக மியான்மர் நாட்டு காடுகளில் சென்று பதுங்கினார்கள்.

இந்திய ராணுவம் இதை ஒரு கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டது. உடனடியாக மியான்மர் காடுகளில் நுழைந்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி, அந்த தீவிரவாதிகளைக் கொன்றது. அந்தத் தாக்குதலை நடத்தியவர், அப்போது லெப்டினென்ட் ஜெனரலாக இருந்த பிபின் ராவத். அப்போது நாகாலாந்தில் இருந்த நேரத்தில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார்.

ராவத். கடைசியில் அவர் ஹெலிகாப்டர் விபத்திலேயே தமிழகத்தில் உயிரிழக்க நேரிட்டது துயரம்.2016 செப்டம்பர். காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உரி என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இன்னும் 20 பேர் மோசமாக காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று விட்டனர். அப்போது பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி. எல்லை தாண்டி சென்று தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் முடிவெடுத்தது. இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை திட்டமிட்டுக் கச்சிதமாக நடத்திக் கொடுத்தார் ராவத். பாகிஸ்தான் பகுதியில் இருந்த பல தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் ராணுவம்தான் எல்லை தாண்டிச் சென்று சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என்றிருந்த நிலையை மாற்றி, இந்திய ராணுவத்துக்கும் அப்படி ஒரு முகம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் பிபின் ராவத்.ஜெனரல் பிபின் லக்ஷ்மண் சிங் ராவத்தின் ரத்தத்தில் ராணுவ உணர்வு கலந்திருந்தது. தாத்தா, அப்பா என்று எல்லோருமே ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இந்திய ராணுவத்தில் போர்க்குணத்துக்குப் பெயர் பெற்ற கூர்க்கா ரெஜிமென்டில் லெப்டினன்ட் ஜெனரலாகப் பணிபுரிந்தவர் ராவத்தின் அப்பா. அவரைப் போலவே அந்த கூர்க்கா படையில் போர்க்கலை பயின்றார் மகன்.இருப்பதிலேயே சீனியர் ஆபீஸரைத்தான் இந்திய ராணுவத்துக்குத் தலைமைத் தளபதியாக நியமிப்பது மரபு.

இதனால், போர்க்கள அனுபவம் இல்லாதவர்கள்கூட தலைமைத் தளபதி ஆகியிருக்கிறார்கள். காலம் காலமாக இருந்த இந்த மரபை மாற்றி, சீனியர்கள் இருவரைப் புறக்கணித்துவிட்டு மூன்றாவது இடத்தில் இருந்த பிபின் ராவத்தை கடந்த 2017 ஜனவரியில் ராணுவத் தளபதி ஆக்கினார் மோடி. காரணம், சியாச்சின் எல்லையின் நிலவரமும் அவருக்குத் தெரியும்; காஷ்மீரில் எங்கெங்கு தீவிரவாதிகள் ஊடுருவல் நிகழ்த்துவார்கள் என்பதையும் அவர் அறிவார்.

வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களின் ஜாதகமும் அவருக்கு அத்துபடி.
சர்வதேச அளவில் இந்திய ராணுவத்துக்குக் கௌரவம் தந்த ஒரு விஷயம், ஐ.நா அமைதி காக்கும் படையில் பங்கெடுத்து காங்கோ நாட்டில் அமைதியை நிலைநாட்டியது. அந்த மிஷனுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றவர் ராவத்.

அதுவரை ஐ.நா அமைதி காக்கும் படைக்கு காங்கோ மக்கள் மத்தியில் மரியாதை இல்லை. இவர்களின் வாகனங்களைப் பார்த்தால் கல் எறிந்து தாக்குவார்கள். காங்கோ அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த சண்டையில் பொதுமக்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஐ.நா படையோ மௌனமாக வேடிக்கை பார்த்தது. ‘எங்களுக்கு உதவாத நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்’ என்று மக்கள் கோபம் ஐ.நா படை மீது திரும்பியது.

பிபின் ராவத் அங்கே போனதும் சூழலையே மாற்றினார். ‘அமைதி காக்கும் படை என்பது வேடிக்கை பார்க்கத் தேவையில்லை, நம்மிடம் பிறகு ஆயுதங்கள் எதற்கு?’ என்ற கேள்வியுடன் களத்தில் இறங்கினார். மக்களைத் தாக்கவோ, தங்கள் படைக்கு ஆள் சேர்க்கவோ கிளர்ச்சியாளர்கள் வந்தபோது அவர்களை ஐ.நா படை விரட்டியது. கிளர்ச்சியாளர்கள் மீது விமானத் தாக்குதலையும் நடத்தினார் ராவத். அதன்பின் காங்கோ மக்கள் ஐ.நா படையை மரியாதையாகப் பார்த்தனர்.

விரைவில் அங்கு அமைதி திரும்பியது. இரண்டு சர்வதேச விருதுகளை இந்திய ராணுவம் அங்கே வென்றது. 1979ம் ஆண்டு முதன்முதலில் ராணுவத்தில் சேர்ந்தபோதே மிசோரம் மாநிலத்தில்தான் அவருக்குப் பணி. அப்போது அங்கு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவம் இருந்தது. தினம் தினம் குண்டுகள் வெடிக்கும், துப்பாக்கிகள் முழங்கும் சூழலில் பணி செய்வது அப்போதே அவருக்குப் பழகிவிட்டது.

ராணுவ உடையில் இல்லாதபோது பிபின் ராவத் ஓர் அமைதியான ஜென்டில்மேன். சீருடை போட்டுவிட்டால் அவர் டெர்ரர். இளம் அதிகாரியாக இருந்தபோதே அப்படித்தான். 1987-ம் ஆண்டு அருணாசலப் பிரதேச எல்லையில் சும்தோராங் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, சிறிய படையை வைத்துக்கொண்டு அவர்களை எதிர்த்தார் பிபின் ராவத். 1962 சீனப் போருக்குப் பிறகு சீனாவுடன் நிகழ்ந்த மிகப்பெரிய மோதலாக அப்போது அது கருதப்பட்டது. ‘யார் இந்த ராவத்’ என்று அப்போதே கேட்க வைத்தார்.


சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் ஊடுருவியபோது எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பு காட்டியது இந்திய ராணுவம். இழப்புகள் இருந்தாலும், சீனாவின் முரட்டுத்தனத்தை எதிர்த்து நிற்க முடியும் என்று இந்திய ராணுவத்துக்கு மனோரீதியாகப் புரிய வைத்தவர் பிபின் ராவத். சீனாவுடனான இந்தியாவின் மோதல் பண்பாட்டுரீதியானது என்று பேசி சர்ச்சையும் ஏற்படுத்தினார்.

அவர். இந்திய ராணுவத்தில் முப்படைத் தளபதி என்று ஒரு பதவி இதுவரை கிடையாது. ராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி. விமானப்படைத் தளபதி ஆகிய மூவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள். இவர்களில் யார் ஒருவரை முப்படைத் தளபதி ஆக்கினாலும், மற்ற இருவரும் பிரச்னை செய்வார்கள். அப்படி நடந்த வரலாறும் உண்டு.அந்த வரலாற்றை மாற்றி, இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக 2020 ஜனவரி முதல் தேதி நியமிக்கப்பட்டவர் பிபின் ராவத். எல்லா படையினரும் வித்தியாசங்களைக் கடந்து மதிக்கும் ஒரு வீரராக இருந்தார் என்பதே பிபின் ராவத்தின் பெருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *