

மதுரை வாடிப்பட்டியில், தாலுகா அலுவலகத்தில் இருந்து பழைய நீதிமன்ற செல்லும் சாலையில் இருபுறமும் மூன்றுஅரசு மதுபான கடைகள் உள்ளது. இந்த மதுபான கடைகளால் இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் அப்பாவி இளைஞர்கள் படுகாயம் அடையும்நிலை ஏற்படுகிறது. நேற்று இரவு கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அரசு மதுபான கடைக்கு மது வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து திரும்பும்போது எதிரே வந்த தனியார் பேருந்து,இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக சாலையின் இடதுபுறம் திருப்ப முயன்ற போது,அந்தப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களான அஜய் வயது 20 ஷாகர் வயது 22 ஆகியோர் மீது தனியார் பேருந்து மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுமுதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து, அந்த பகுதிவாசிகள் கூறுகையில், வாடிப்பட்டியில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் அருகருகே மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் இந்த பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் சாலையின் எதிரே வருபவர்கள் தெரியாத வகையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி அருகில் உள்ள பகுதிகளில் சில்லறை விலைக்கும் மதுவை விற்பனை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது. இது குறித்து இந்த பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை இந்த நிலையில் தான் நேற்று நடந்த விபத்தில் அப்பாவி வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆகையால் அரசு வட்டாட்சியர் அலுவலகம் அரசு கருவூலம் யூனியன் அலுவலகம் மற்றும் ஆர்டிஓ அலுவலகம் இரண்டு தனியார் பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ள நிலையில் இந்த மதுபான கடைகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது ஆகையால் அரசு உடனடியாக மதுபான கடைகளை வாடிப்பட்டியின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

