விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா மாரீஸ்வரன் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (வயது58 ) இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை விளாமரத்துப்பட்டியில் இயங்கி வருகிறது.

இந்த பட்டாசு ஆலை கடந்த ஆறு மாதமாக பட்டாசு உற்பத்தி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடை மே 26 ம்தேதி முடிந்த நிலையில் 5 நாட்களாக மழையின் காரணமாக பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் பட்டாசு உற்பத்தியை தொடங்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது பட்டாசு தயாரிக்க பயன்படும் ரசாயன கலவை செய்யும் அறையில் திடீரென் புகை வெளியேறத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேறினர். உடனடியாக வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேதியல் கலவையில் மணல் போட்டு மூடினார்கள். தொடர்ந்து தீ பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை நடத்தினார்கள்.