• Wed. Dec 11th, 2024

பற்றி எரியும் இலங்கை -மகிந்த ராஜபக்‌ஷே வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்

ByA.Tamilselvan

May 10, 2022

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே தற்போது வெளிநாடுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த 1 மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அதிபர் கோத்தபயராஜபக்சே ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் ,எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் கொல்லாப்பட்டார். தொடர்ந்து வன்முறை நடைபெற்றுவருகிறது.இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்‌ஷே பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியது. பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிப்பது குறித்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.