• Sat. Apr 20th, 2024

போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்

ByA.Tamilselvan

Aug 24, 2022

போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவினை திமுக அரசு கைவிடவேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …. – வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும், இந்த மையத்தின் அங்கீகாரத்தை புதுப்பித்தலுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக, அதாவது ஆறு மடங்கு உயர்த்தவும், இந்த மையத்தை புதுப்பிப்பதற்கான தாமதக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வருகிறது.
போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு கட்டணம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும், சி.எப்.எக்ஸ். அறிவிப்பினை திரும்பப் பெறும் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக, கிட்டத்தட்ட 16 மடங்கு உயர்த்தவும், தற்காலிகப் பதிவு மற்றும் தற்காலிகப் பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தலுக்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக, அதாவது நான்கு மடங்கு உயர்த்தவும், பிற மண்டல வாகனங்களின் தகுதிச் சான்றுக்கான கட்டணம் ஏதுமில்லாத நிலையில் 500 ரூபாயாக நிர்ணயிக்கவும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கான கட்டணம் 75 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கிற்கு மேல் உயர்த்தவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
தகுதிச்சான்று நகல் பெறுவதற்கான கட்டணம் ஏதுமில்லாத நிலையில் 250 ரூபாயாக நிர்ணயிக்கவும்; மோட்டார் வாகன ஆய்வாளரின் உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டுக் கட்டணம் 40 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக, அதாவது 12 மடங்கிற்கு மேல் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. பல்வேறு இன்னல்களால் துன்பப்பட்டு கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தும் முடிவினை தி.மு.க. அரசு கைவிட வேண்டுமென்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள். எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *