தகவெ கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் நேற்று இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து , ஆதவ் அர்ஜுனா தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளராகவும்,சி.டி.ஆர். நிர்மல் குமார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச்செயலாளராகவும், ராஜ்மோகன் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், லயோலா மணி (எ)மணிகண்டன் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராகவும், பேராசிரியர் சம்பத்குமார் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதன்படி 19 பேருக்கு பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது.
இதில், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, தனது அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்று தவெக தலைவர் விஜய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதன் பின் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொள்கை ரீதியாக திருமாவளவனிடம் இருந்து மிகப்பெரிய கருத்துகளை உள்வாங்கி கள அரசியலை கற்றுக்கொண்டேன்.எனது ஆசானாக இருக்கக் கூடிய திருமாவளவனிடம் ஆசி பெற்று எனது பயணத்தை தொடங்குவேன் என்று மக்களிடம் கூறியிருந்தேன். அதன்படி திருமாவளவனிடம் வாழ்த்து பெறவும், ஆசி பெறவும் இங்கு வந்தேன். அவர் நிறைய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அதிகாரத்தை அடைவதற்கான பயணத்தில், கொள்கைப்படி அரசியலை உருவாக்க வேண்டும் என்பதே எப்போதும் அவரது அறிவுரையாக இருக்கும். அவர் சொன்னபடி பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைப்படி எனது பயணம் இருக்கும். தவெகவும், விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை. நாங்கள் ஒரே துருவத்தில், ஒரே கருத்தில்தான் இருக்கிறோம். கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.” என்றார்.