

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பேரையூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் செல்வராஜ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேரையூர் மங்கல்ரேவ் விளக்கிலிருந்து அவரது ஆம்னி வாகனத்தில் மாட்டுத்தாவணி நோக்கி மீன் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது செல்வராஜ் தன் ஆம்னி வாகனத்தின் கேஸ் இல்லாததால் பசுமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கேஸ் நிரப்புவதற்காக வந்துள்ளார். கேஸ் நிரப்பிய பின்னர் ஆம்னி நான்கு சக்கர வாகனம் இயங்காததால், தனது ஆம்னி காரில் சிறிது பெட்ரோல் நிரப்பினால் இயங்கும் என அறிந்த செல்வராஜ் பெட்ரோல் நிரப்பும் இடத்திற்கு ஆம்னி காரை தள்ளிக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது திடீரென ஆம்னி காரின் அடியிலிருந்து தீ பிடிக்க தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயற்சி ஈடுபட்டனர். ஆனால் தீயானது கார் முழுவதுமாக பரவத் தொடங்கியது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆன துரிதமாக செயல்பட்டு தீயை முழுவதுமாக அணைத்தனர். இதனால் மிகப்பெரிய பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

