தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான வீரராகவன் ஏரியில், கழிவுநீர் கலப்பை தடுக்கவும், ஆகாயதாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், “மாற்றத்திற்கான மக்கள் இயக்கம்” சார்பில் இன்று காலை சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏரிக்கரையில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் ஆகாயதாமரை செடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும், ஏரிகளை பாதுகாப்பது, நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த தூய்மை பணியில் மாற்றத்திற்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த திரு. சந்தானம், திரு. ரங்காச்சாரி, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. ராமதாஸ், திரு. கண்ணன் கார்த்தி, திரு. பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இயக்கத் தோழர்கள் பலர் கலந்து கொண்டு தன்னார்வமாக பணியாற்றினர்.
நிகழ்வின் போது பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தேவையான ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கிய குரோம்பேட்டை காவல்துறையினருக்கு இயக்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

வீரராகவன் ஏரியை முழுமையாக சீரமைத்து, கழிவுநீர் கலப்பை நிரந்தரமாக தடுக்கவும், ஆகாயதாமரை செடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.




