பல்லாவரம் அருகே கீழ்கட்டளை ராஜேந்திரன் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தை தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதனைத் தடுத்து நிறுத்திய குடியிருப்போர் நலச்சங்கத்தினர், அந்த இடத்தில் பூங்கா அமைத்துத் தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லாவரம் அடுத்த கீழ்கட்டளை ராஜேந்திரன் நகர் குடியிருப்புப் பகுதியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக லேஅவுட்டில் 9,586 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு பகுதியில் அரசு நூலகம் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள காலி இடத்தைத் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள குடியிருப்புவாசிகள், காலி இடத்தில் இருந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற முயன்றபோது, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக கீழ்கட்டளை குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தினர் மடிப்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். எனவே, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த இடத்தைப் பாதுகாத்து, மீதமுள்ள காலி இடத்தில் சிறுவர் விளையாடும் வசதிகளுடன் கூடிய பூங்கா அமைத்துத் தர தாம்பரம் மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.