• Sun. Oct 13th, 2024

நண்பர்களை பார்க்கச் சென்ற ராணுவ வீரர் கிணற்றில் மூழ்கி பலி

ByKalamegam Viswanathan

May 11, 2023

மதுரை தர்மத்துபட்டியில் நண்பர்களை பார்க்கச் சென்ற ராணுவ வீரர் கிணற்றில் மூழ்கி பலி., உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தர்மத்துப்பட்டியில் ராணுவ வீரர் கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் முழ்கி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்டின்பட்டி போலீசார் ராணுவ வீரரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (35) இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திவ்யா (33) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் விடுமுறைக்காக நேற்று மாலை சொந்த ஊரான தர்மத்துப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார்.
தொடர்ந்து., இன்று மதியம் தனது நண்பர்களான சபரி, செல்வம், ராஜா ஆகியோர்களை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் தர்மத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சிதம்பரம் என்பவரது தோட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக தோட்டத்திற்கு சங்கர் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த கிணற்றில் குதித்து குளிக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். தொடர்ந்து., சங்கர் கூச்சலிடவே அவரது நண்பர்கள் கவனிக்காமல் விட்டுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து சங்கரை தேடிய போது அவர் காணவில்லை. இதனை தொடர்ந்து., திருமங்கலம் காவல் நிலையத்திற்கும்., தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி சங்கரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *