• Mon. Mar 24th, 2025

வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

BySeenu

Mar 17, 2024

வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை : உடனடியாக வனப் பகுதிக்குள் விரட்டினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு – தீவிர கண்காணிப்பில் வனத்துறை

கோவை, பேரூர் மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை,, மாதம்பட்டி இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 30 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள் வனப் பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வைத்து இருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களை சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில் கரடிமடை, தீத்திபாளையம் பகுதிகளில் சுற்றி வரும் ஒற்றை ஆண் காட்டு யானை தனியாக உள்ள வீட்டின் கதவை உடைத்து அரிசியை சாப்பிட்டு வருகிறது. மேலும் அந்த ஒற்றை யானை கீழே தள்ளி விட்டதில் மூன்று பேர் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில் அந்த ஒற்றை யானை இரவு மதுக்கரை வனச் சரகத்தில் இருந்து கோவை வனச் சரத்திற்கு உட்பட்ட வேடப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது இது குறித்து தகவல் அறிந்த கோவை வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர் எனினும் வனத் துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை திடீரென மாயமானது இதனை தொடர்ந்து பேரூர் தமிழ் கல்லூரி அருகே ஒற்றை யானை நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் வனத் துறையினர் அங்கு சென்று பார்த்த போது வனத்துறையினர் தேடி வந்த ஒற்றை யானை அங்கு நிற்பது தெரிய வந்தது இதனை அடுத்து அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது இரவு முழுவதும் வேடப்பட்டி, பேரூர் பகுதியில் சுற்றி வந்த யானை தற்போது வழி தவறி ஊருக்குள் நிற்கிறது. இதனை உடனடியாக வனப் பகுதிக்குள் விரட்டினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, குடியிருப்புகள் அதிகமாகவும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவும் இருப்பதால் மாலை நேரத்தில் இந்த யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வனத்துறை மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் இந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.