• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ/இறைச்சிக் கழிவுகள் ?

BySeenu

Aug 19, 2026

​ கோவை – அவிநாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் – நீலாம்பூர் இணைப்புச் சாலையில், குவியல், குவியலாக மாட்டின் மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுக் கிடந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இவை கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட கழிவுகளா ? என்ற புதிய கோணத்திலும் சந்தேகம் எழுப்பி உள்ள சமூக ஆர்வலர்கள்.

கோவையின் எல்லைப் பகுதிகளான வாளையார், ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வழியே கேரள மாநிலத்தில் இருந்து பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் நள்ளிரவு நேரத்தில் லாரிகளில் கடத்தி வரப்பட்டு, தமிழக எல்லை மற்றும் கோவை புறநகர்ப் பகுதிகளில் உள்ள புதர்களில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவது தொடர்க கதையாக இருந்து வருகிறது.

​தற்போது நீலாம்பூர் பகுதியிலும் நூற்றுக்கணக்கான மாட்டின் மண்டை ஓடுகள் லாரி கணக்கில் கொட்டப்பட்டு இருப்பதால், இதுவும் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு நள்ளிரவில் வீசிச் செல்லப்பட்ட கழிவுகளாக இருக்கலாம் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பலமான சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

சின்னியம்பாளையம் – நீலாம்பூர் சாலையோரப் புதரில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற நபர் ஒருவர், துர்நாற்றம் வீசியதைக் கண்டு பார்த்த போது குவியல், குவியலாக மாட்டின் மண்டை ஓடுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அதைச் செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட, அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

இக்கழிவுகளால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாகித் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
​எனவே, மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாக அப்பகுதியைச் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைக் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கேரளாவில் இருந்தோ ? அல்லது உள்ளூர் கசாப்புக் கடைகளில் இருந்தோ ? கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிய மர்ம நபர்கள் மீது கடினமான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.