• Thu. Dec 12th, 2024

ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளி

ByA.Tamilselvan

Aug 11, 2022

திருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.
திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவி சரளா (17) கடந்த மாதம் 25ம் தேதி காலை விடுதி அறையின் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி மரணத்தை அடுத்து கடந்த மாதம் 25-ம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், மாணவிகளின் நலன் கருதி, நேற்று அந்தப் பள்ளி மீண்டும் செயல்படத் தொடங்கியது.
முதல் நாளான நேற்று பள்ளியின் மொத்த மாணவிகள் 859 பேரில், 617 மாணவிகள் (சுமார் 70 சதவீதம்) பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வராத மாணவிகளில் 63 பேர் விடுதி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதியின் மொத்த மாணவிகள் 63 பேரில், தெக்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாணவிகள் 23 பேர் நேற்று வேறு பள்ளிகளில் சேருவதற்காக மாற்றுச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.