• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மழைநீர் வடிகால்வாய் பணிக்காக 75% பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் வேறு பாதையை சாலையில் தோண்டப்பட்டதால்சாலை மறியல்..,

ByPrabhu Sekar

Sep 28, 2026

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம், இரும்புலியூர், உமா நகர், டி.டி.கே.நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே மாநகராட்சி ஒப்புதல் அளிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு 75 சதவீத மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திடீரென கால்வாய் திட்டப் பாதையை மாற்றி பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் மீண்டும் சாலைகள் தோண்டப்படுவதைக் கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ஊர்வலமாகச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​ஏற்கெனவே அரசின் ஒப்புதல் பெற்று 75% பணிகள் நிறைவுற்ற வழித்தடத்தை மாற்றுவது நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இப்புதிய திட்டப் பணிகள் பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் நடைபெற்றால் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

​ஏற்கனவே பணிகள் தொடங்கி 75% முடிவுற்ற நிலையில், மீதமுள்ள கால்வாய் பணிகள் சுமார் 157 மீட்டர் மட்டுமே உள்ளது. ஆனால், தற்போது மாற்றுப் பாதையில் அமைக்க முயன்றால் புதிதாக சுமார் 600 மீட்டருக்கு கால்வாய் வெட்ட வேண்டியிருக்கும். இதனால் தேவையற்ற திட்டச் செலவும், அரசு நிதிக்கான கூடுதல் சுமையும் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் தற்போது பணிகள் நடைபெற உள்ள ​மாற்றுப் பாதையில் பல வளைவுகள் இருப்பதால் நீரோட்டத்தின் வேகம் குறைந்து வெள்ள அபாயம் தீவிரமடையும். இதனால் அன்னை இந்திரா நகர், ஜெருசலேம் நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கண்ணன் அவென்யூ உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்காலத்தில் கடுமையான வெள்ள பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

​இதனால் ​வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதுடன், புதிய பாதாள சாக்கடை வசதிகளையும் அமைக்க முடியாமல் போகலாம்.

​கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால் நிலத்தடி நீர் மாசுபடுதல், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரச் சிக்கல்கள் உருவாகும்.

​கால்வாயில் உடைப்பு ஏற்பட்டால் கழிவுநீர் தேங்கி நோய் பரவுவதோடு, அருகில் உள்ள வீடுகளின் அடித்தளம் மற்றும் கட்டடங்களை அவை பாதிக்கும் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

​இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டபோதிலும், யாரிடமிருந்தும் முறையான பதில் அளிக்கப்படவில்லை.

​எனவே, ஏற்கனவே 75 சதவீதம் பணி முடிந்த மூலப்பாதையிலேயே எஞ்சிய பணிகளை முடிக்க வேண்டும் என்றும், புதிய பாதையில் கால்வாய் பணிகள் நடைபெற்றால் அரை கிலோமீட்டருக்கு மேல் சாலைகள் தோண்டப்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசலும் வெள்ள அபாயமும் ஏற்படும் என்பதால், அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.