அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பலபேரின் பசியைப் போக்கி வரும் நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் விரைவில் புதிய மாற்றம் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் மாற்றம் என தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திமுக அரசு பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு தற்போது அம்மா உணவகத்திலும் சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் மலிவு விலையில் அம்மா உணவகத்தில் உணவு கிடைப்பதால் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெற்று வந்தனர்.
அம்மா உணவகத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பின் காரணமாக திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகும் அம்மா உணவகம் மூடப்படவில்லை. நிதி பிரச்சனையின் காரணமாக அம்மா உணவகத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகத்தில் விலையேற்றம் செய்யலாமா அல்லது வேறு ஏதேனும் புதிய திட்டத்தை கொண்டு வரலாமா என்பது குறித்து இரண்டு லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அம்மா உணவகத்தில் மதிய உணவில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் எனவும், பொதுமக்களை பாதிக்காத வகையில் சிறிது விலையேற்றம் செய்யலாம் எனவும் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக விரைவில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.