• Tue. Apr 30th, 2024

தஞ்சையில் பா.ம.க வேட்பாளரை கதற விட்ட விவசாயி

Byவிஷா

Apr 3, 2024

தஞ்சையில் பா.ம.க வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது, சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு போராடி வரும் எங்களுக்கு எந்த ஒரு ஆதரவும் தெரிவிக்காமல், எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்டு வருகிறீர்கள் என விவசாயி கேள்வி கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் வாக்கு சேகரித்தார். இவர், ஆதனூர்-புள்ளபூதங்குடி இடையில் உள்ள நரசிம்மபுரத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாகனத்தில் நின்றபடிச் சென்று வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த 491 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வாக்குச் சேகரித்துச் சென்ற வாகனத்தை திடீரென மறித்து கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.
அதில் ”இத்தனை நாளாக எங்குச் சென்றீர்கள், எங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து 491 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது போராட்டத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்போது எங்களிடம் வாக்கு கேட்டு வருகிறீர்கள். தற்போது நீங்கள் கூட்டணி வைத்துள்ள கட்சிதான் மத்தியில் உள்ளது. ஏன் அவர்களிடம் பேசி எங்களுடைய பிரச்சினையை தீர்க்கவில்லை. என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பாமக வேட்பாளரான ம.க.ஸ்டாலின் பதில் கூறாமல் மௌனமாக இருந்தார்.
பின்னர், அங்கு வந்த கட்சி நிர்வாகிகள், வாகனத்தை மறித்த கரும்பு விவசாயிகளை சமாதானப்படுத்தும் விதமாக ஓரமாக அழைத்துச் சென்றதும், வேட்பாளர் வந்த வாகனம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *