• Mon. May 6th, 2024

கும்பகோணம் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்குதல் : எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை

Byவிஷா

Apr 22, 2024

கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் கும்பகோணம் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை விடுத்துளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரையில் நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இளைஞர்கள் சிலர் பைக்கை நிறுத்தி வைத்து பேசிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் ரமேஷ், அவர்களை ஓரமாக செல்லுமாறு கூறி ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பஸ்ஸில் ஏறி ஓட்டுநர் ரமேஷ், நடத்துநர் செந்தில்குமார் ஆகியோரை கொடூரமாக தாக்கினர். மேலும், அவர்களை தடுக்க சென்ற பொதுமக்கள், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் ரமேஷ், நடத்துநர் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவரை பிடிக்கச் சென்ற போலீஸார் மீது அவன், போலீஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து ஓடினார். இந்த 2 சம்பவங்களின் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..,
கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகரில் போலீஸார் மீது போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்தியதாகவும் வரும் செய்திகள் பெரும் கவலை அளிக்கின்றன. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மளிகை பொருளை போல எளிதாக கிடைப்பதாக பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் என்னிடத்தில் வருத்தத்துடன் தெரிவித்தனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. எனவே, சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *