சென்னையில் கடந்த 6-ந்தேதி முதல் பெய்த பலத்த மழையில், நகரமே வெள்ளக்காடானது. ஒரு வாரம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சென்னையில் மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததே வெள்ளநீர் வடியாததற்கு முக்கிய காரணம் ஆகும் என்று கூறப்பட்டது.
இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில், அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் சரிவர தூர்வாரப்படவில்லை என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். அவர் கூறுகையில், ‘தி.மு.க. அரசு மழை நீரை அகற்ற முடியாத நிலையில் எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்’ என்றார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றச்சாட்டுகளை கூறி தங்களுக்கான பொறுப்புகளை ஆளுகின்றவர்கள் தட்டிக்கழிக்கக் கூடாது’ என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மழை நீர் வடிகால் அமைத்ததில் நடந்த முறைகேடுகளை விசாரணை கமிஷன் அமைத்து கண்டுபிடிப்போம் என்று அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு, கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து உள்ள நிலையில், அங்கு நேரில் பார்வையிட நாளை (திங்கட்கிழமை) செல்ல என முடிவு செய்து உள்ளதாகவும், மொத்த சேத கணக்கும் வந்த பிறகு மழைசேத விவரம் குறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படும் எனவும், தேவைப்பட்டால் இங்கு இருக்கிற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமரிடம் நேரடியாக சென்று கோரிக்கைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு..
நான் அதைப்பற்றி கவலைப்படுவது கிடையாது. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல, ஓட்டுபோடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எனது கொள்கை. அந்த வழியில் எங்களது பயணம் இருக்கும்.
எதிர்க்கட்சிகள் என்ன புகார் செய்தாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை மழை முடிந்த பிறகு அதற்கென்று விசாரணை கமிஷன் வைக்கப்பட்டு எங்கெங்கு தவறுகள் நடந்துள்ளது என்பதை கண்டறிந்து யார் குற்றவாளிகளோ, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.