• Tue. Apr 30th, 2024

அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்- அமைச்சர் தகவல்

ByA.Tamilselvan

Sep 18, 2022

அலங்கநல்லூரில் ஜல்லிகட்டு அரங்கம் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு உறுதி செய்தனர். பின்னர் அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது:- தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வளாகம் அமைக்க சட்டசபையில் முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தை அரசு ஒரு போதும் எடுக்காது. இந்த இடத்தை சீர் செய்து விரைவில் பணியை தொடங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல் இதற்கான நில அளவை பணி தொடங்கப்படுகிறது.
வருகிற 2024-க்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அந்த வகையில் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *