• Tue. Apr 30th, 2024

அதிமுக பொதுக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!!

ByA.Tamilselvan

Jul 11, 2022

இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜூலை 11ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக திங்கள் மாலைதான் தனக்கு தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
2,432 உறுப்பினர்கள் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர மற்ற நிவாரணங்களை கேட்கலாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது என ஈபிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் குறித்து ஜூன் 23 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டு விட்டது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்தார்கள். ஓ.பி.எஸ் தனக்கு தெரிவிக்காமல் பொதுக்குழு அறிவிக்கப்பட்டதாக கூற முடியாது என்றும் ஈபிஎஸ் தரப்பு கூறியது.
கட்சி நலனுக்காக வழக்கு தொடர்ந்ததாக கூறும் ஓபிஎஸ், தனக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். ஓ.பி.எஸ். மனுவை அபராததுடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென ஈ.பி.எஸ். தரப்பில் இடைக்கால பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு தனது வாதத்தில், இரு பதவிகளும் காலியாக உள்ளதாக முன் வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். இறந்த கட்சியில் என்ன ஆனது என்பது குறித்து ஈ.பி.எஸ் தனது மனுவில் விளக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று காலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை வழக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *