• Mon. Apr 29th, 2024

சித்ரா பௌர்ணமியின் சிறப்பு..!

Byவிஷா

Apr 16, 2022

சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் இணைந்த பௌர்ணமி தினத்தன்று அனுஷ்டிக்கப்படும் ஒரு நாளாகும். ‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். இந்நாளில் கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோரகள் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம். மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள்.
சித்திரா பௌர்ணமியன்று ஒரு கலசம் ஆவாஹனம் செய்து சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம். சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம் என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள இந்துக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் சித்ரா பௌர்ணமி இன்று வருகிறது. இன்று சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *