தமிழில் கவிதை பாடி விமான பயணிகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இண்டிகோ துணை விமானிக்கு பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை விமானி ப்ரிய விக்னேஷ் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது இண்டிகோ நிறுவனத்தில் துணை விமானியாக பணியாற்றி வருகிறார். இவர், சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற விமானத்தில், துணை விமானியாக இருந்தபோது, தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டதோடு, ஒத்தக்கடை நரசிங்க பெருமாள், வைகை ஆறு உள்ளிட்ட இடங்களின் மேல் விமானம் பறந்த போது, அவற்றின் சிறப்புகளை தமிழில் அறிவித்து பயணிகளின் கவனத்தை ஈர்த்தார். இதற்காக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தமிழ் புத்தாண்டு அன்று இண்டிகோ விமானத்தில் பறக்கும் முன்னர், விமான பயணிகளிடம் தமிழில் கவிதை புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டார். விமான பயணிகளிடம் அவர் இந்த நன்னாளில் உங்களுக்கு ஒரு கவிதையை வாசிக்க விரும்புகிறேன் எனக் கூறி, “தமிழும் அவளும் ஓரினம்… எங்கள் வீட்டில் புராதனமாய் எனது பாட்டி கால் இரண்டையும் நீட்டி இப்படி தான் அறிமுகப்படுத்தினாள் தமிழ் மாதங்களை எனக்கு… சித்திரையில் சிங்காரித்து வைகை ஆற்றில் வாராரு அழகர் ஐயா” என தொடங்கும் அழகான கவிதையை வாசித்தார். இதைக் கேட்டு அங்கிருந்த பயணிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.