• Tue. Apr 30th, 2024

மதுபோதையில் இருந்தாரா திமுக எம்.எல்.ஏ. மகன்?.. வெளியானது விபத்திற்கான பரபரப்பு காரணங்கள்!

By

Aug 31, 2021 ,

இன்று அதிகாலை 1.45 மணிக்கு தமிழகம், ஓசூரைச் சேர்ந்த திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் பெண்கள் உட்பட ஏழு பேர் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சென்ற கார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, கோரமங்களா பகுதியில் உள்ள மங்கள கல்யாண மண்டபத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓசூர் தொகுதியின் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ். விபத்தின் காரணமாக இறந்த ஏழு பேரில் ஓசூர் ஒய் பிரகாஷின் மகன் கருணாசாகர் அந்த காரை இயக்கி உள்ளார். இந்த விபத்தில் இறந்த ஏழு பேரில் 28 வயதான டாக்டர் பிந்து, இஷிதா (21) தனஷ் (21), கேரளாவைச் சேர்ந்த அஜய் கோயல்; ஹரியானாவைச் சேர்ந்த உத்சவ், மற்றும் ஹுப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் (23). ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

 

தற்போது விபத்திற்கான காரணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது விபத்துக்கு முதல் காரணம் எனக்கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளின் படி அவர்கள் யாரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது, அதனால் தான் சொகுசு காரில் ஏர்பேக்குகள் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. டிரைவர் குடிபோதையில் இருந்தாரா? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையில் இருந்த மின்கம்பத்தில் மோதி, பின்னர் பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டிடத்தின் சுவரில் மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய வாகனம் சஞ்சீவினி ப்ளூ மெட்டல் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் திமுக எம்.எல்.ஏ. மகன் கருணாசாகர் அட்டைக் கம்பெனி ஒன்றை நடத்தியுள்ளார். நேற்று இரவு நண்பர்களுடன் வெளியே செல்வதாகவும், இரவு உணவுக்கு வரமாட்டேன் என வீட்டில் இருந்தவர்களிடம் போனில் தெரிவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய ஆடி க்யூ 3 வாகனம் முற்றிலும் சேதமடைந்து நொறுங்கியது. இடது பக்கத்தில் இரண்டு பின்புற சக்கரங்களும் சுக்கு நூறாகியுள்ளது.

பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையர் டாக்டர் ரவிகாந்த கவுடா சம்பவ இடத்திற்கு வந்து, ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அலட்சியம் மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டியதால் விபத்து நடந்துள்ளது. காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழுவால் விசாரணை நடத்தப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *