• Tue. May 7th, 2024

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு.. இந்திய விதிகளை எதிர்த்த வழக்கு – அபராதத்துடன் தள்ளுபடி!

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளின்படி, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

பின்னர் 12 மாதங்கள் கட்டாயப் பயிற்சி பெற வேண்டும். மேலும் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்தியாவில் பதிவு செய்ய, அதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விதிகளை எதிர்த்து அரவிந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், மொரீஷியஸ் நாட்டில் மருத்துவப் படிப்பு 36 மாதங்கள் என்ற நிலையில், அந்த நாட்டில் மருத்துவம் படிக்க நினைக்கும் தனது மருத்துவ கனவுக்கு, இந்த விதிகள் இடையூறாக இருப்பதாகவும், எனவே இந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, “நோயாளிகளின் உயிரைக் காக்கும் மருத்துவப் படிப்புக்கு தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளை விரைவாகப் படிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த சட்ட விரோதமும் இல்லை. மேலும், மனுதாரர் மொரீசியஸில் உள்ள கல்லூரியில் விண்ணப்பிக்காத நிலையில், ஊகத்தின் அடிப்படையில் இந்த வழக்கைத் தொடர்ந்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளார். எனவே மனுதாரர் ரூ.25 ஆயிரம் அபராதத்தை, 15 நாட்களில் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *