• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தெலுங்கானா பத்திரப்பதிவு அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டில்..,
பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்..!

Byவிஷா

Jan 31, 2022

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு நாற்பத்தி மூன்று லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் அபகரித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலவத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பத்திரப்பதிவு கட்டணங்கள் உயரவுள்ளதால், இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவு மக்கள் பத்திரவுப் பதிவு செய்ய குவிந்தனர். சித்திப் பேட்டை பத்திர பதிவு அலுவலகத்திற்கு இன்று வந்த ரியல் எஸ்டேட் அதிபர் நரசய்யா தான் புதிதாக கட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை வேறு ஒருவருக்கு விற்று அதற்கான பணம் ரூ.43 லட்சத்தை அங்கு பெற்று கொண்டார்.
பின்னர் பணத்தை தன்னுடைய கார் டிரைவரிடம் கொடுத்து பணத்துடன் காரில் இருக்குமாறு கூறி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் சென்று விட்டார். அப்போது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்றில் அங்கு வந்த 2 பேர் ரியல் எஸ்டேட் அதிபர் நரசய்யாவின் கார் கண்ணாடியை உடைத்து அவருடைய டிரைவர் காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த டிரைவர் காரை அங்கிருந்து சுமார் 10 மீட்டர் தூரம் வேகமாக ஓட்டினார். ஆனாலும் விடாமல் துரத்திய இரண்டு பேரும் டிரைவர் வைத்திருந்த பணப்பையை அபகரித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்களை விரட்டி வந்து பிடிக்காமல் தடுப்பதற்காக வானத்தை நோக்கியும் அவர்கள் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த சித்திப்பேட்டை போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் கிடந்த துப்பாக்கி தோட்டாவை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். தன்னிடம் வீடு வாங்கிய நபர் மீது இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர் நரசய்யா கூறுகிறார்.