• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பாரம்பரியத்தின் அடையாளமாய் விளங்கும் ஊட்டி அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கம்!

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்களில் பட்டும் படாமலும் தனது 125 ஆண்டுப் பாரம்பரியத்துடன் காட்சியளிக்கிறது அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கு..

அரசினால் அமைக்கப்பட்ட வணிகநோக்கற்ற டிரஸ்டே இந்தக் கொட்டகையை நடத்துகிறது. இதற்குத் தமிழக கவர்னர் ஒரு புரவலர், மாவட்ட ஆட்சியரே டிரஸ்ட்டின் தலைவர் என்றால் நம்ப முடிகிறதா?

ஊட்டியில் தங்கிய ஆங்கிலேயரின் பொழுதுபோக்குக்காக உருவானது இந்தத் தியேட்டர். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வெலிங்டன் சீமானின் மனைவி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு இக்கொட்டகையை பிரவுன் என்பவரிடம் இருந்து வாங்கினார். அதில் அன்றாடம் ஆங்கில நாடகங்கள், பேண்டு வாத்திய இசை என அரங்கேறியதாம். பின்னர் திரைப்படங்கள் கோலோச்சத் தொடங்கிய பின்னர், இதில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தனவாம்.

1939ஆம் ஆண்டு முதல் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய், 50 பைசா என்ற கட்டணங்கள் வசூலித்ததாம் இந்தத் தியேட்டர். இதில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ‘சிந்தாமணி’. அது 4000 ரூபாய் வசூலித்து சாதனை செய்ததாம். இந்தத் திரையரங்கில் மைசூர் மகாராஜா, அண்ணாதுரை, அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் படம் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான திரையரங்குகள் மூடுவிழா கண்டுவரும் இந்தக் காலகட்டத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியத்தை தொடர்ந்து வருவது ஊட்டிவாசிகளுக்கு மட்டுமல்ல திரை உலகினருக்கே பெருமைக்குரிய விஷயம்தான்.

மேலும் இந்த திரையரங்கில் ‘அசெம்ஸ் சினி மியூசியம்’ அமைந்துள்ளது.

இந்த திரையரங்கில், 1950 களில் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஜெர்மன் Bauer B6 ஃபிலிம் புரொஜெக்டர்கள் உள்ளன. 

தற்போது அருங்காட்சியகமாக விளங்கும் இந்த திரையரங்கில் பயன்படுத்தப்பட்ட பழைய உபகரணங்கள்,  திரையரங்கில் பயன்படுத்தப்படும் பழங்காலப் பொருட்கள் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  பெரும்பாலான உபகரணங்கள் இன்னும் நல்ல வேலை நிலையில் உள்ளன.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா செல்லும் ரோட்டில் உள்ள இந்த பழமையை சொல்லும் அசெம்ளி ரூம்ஸ் திரையரங்கையும் காண தவற வேண்டாம்.