• Sun. Sep 15th, 2024

மகளா ? மருமகளா ? மதுரை மேயர் பதவிக்கு மல்லுகட்டு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வேட்பாளர்கள் நேர்காணல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆளும் கட்சி பம்பரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உள்ளடி வேலைகள் பார்த்து கட்சியினரே கவிழ்த்து விடுவார்கள் என்பதனால் கோவையை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கரூரில் இருந்து கட்சி ஆட்களை இறக்குமதி செய்து வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க மதுரை மீது எப்போதும் அனைத்து கட்சிக்களுக்கும் ஒரு கண் உள்ளது. அதனால் இப்போதே வேட்பாளருக்கு மல்லுகட்ட ஆரம்பித்து விட்டனர்.இந்த ஆட்டத்தை ஆளும் கட்சியில் இருந்தே ஆரம்பிக்கலாம். மதுரை மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்சியில் உள்ள நிர்வாகிகள் தங்களது மனைவிமார்களை மாவு ஆட்டுவதிலிருந்து விடுதலை கொடுத்து மாமன்றத்திற்கு அனுப்ப பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

கட்சி நிர்வாகிகளே இப்படி என்றால் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை கேட்கவா வேண்டும் எம்.எல்.ஏ. குடும்பமும் முன்னாள் அமைச்சர் குடும்பமும் மறைமுகமாக மோதி வருகின்றனர். மதுரை மாநகர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் முன்னாள் அமைச்சரும் கூட , சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனது மகன் பொன்.சேதுவுக்கு சீட் கேட்ட போது வாய்ப்பு மறுத்த போதும் வடக்கு தொகுதியில் டாக்டர் சரவணனுக்கு எதிராக கோ.தளபதியை நிறுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தலைமை கூறிய போது அதனை மறுக்காமல் வேலை பார்த்தவர். அதனால் தற்போது மதுரை மேயர் பொறுப்புக்கு கட்டம் கட்டி வருகிறார். தனது மருமகள் மோஸ்னியை எப்படியாவது மேயராக்கி விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
தலைமைக்கு கட்டுப்பட்டு தளபதியை வெற்றி பெற செய்ததற்காக இதனை செய்து தரும்படி கன்டிசன் வேற கூறியுள்ளார்.

அந்த பக்கம் நான் அமைச்சர் பதவியையும், கட்சி பொறுப்பையும் விட்டு கொடுத்தேன். இந்த முறை எனது மகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோ.தளபதி தனது மகள் மேகலாவிற்கு சீட் கேட்டு முறையிட்டுள்ளார். பொன்.முத்துராமலிங்கத்துக்கு மாநிலங்களவை எம்.பி பொறுப்பு கொடுத்துவிடலாம். இந்த முறை எனது மகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார். இது போக ஆனையூர் பகுதிச் செயலாளர் பொம்மத்தேவன் மகள் ரோகிணி, நாராயணபுரம் வார்டு செயலாளர் சசிக்குமார் மனைவி வாசுகி, செல்லூர் கே.ராஜூவிடம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த சின்னம்மாள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் நம்பிக்கையோடு உள்ளனர்.

இந்த பட்டியலில் சம்பந்தம் இல்லாத ஒருவருடைய பெயரும் அடிபடுவதாக தகவல். அது மதுரையின் “அ” னா என்று அழைக்கப்படும் முதல்வரின் சகோதரர் அழகிரியின் ஆதரவாளர் மன்னன் பெயர் தான் அடிபட்டு வருகிறதாம்.சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு வெற்றிக்கு எந்தவித பங்கமும் இல்லாமல் அமைதியாக இருந்ததால் மகிழ்ச்சியடைந்த முதல்வர் அழகிரியின் சகோதரர் மகன் துரைதயாவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கலாம் என்று இருந்த போது அதனை மறுத்து தனது ஆதரவாளருக்கு மதுரை மேயர் பொறுப்பு தரும்படி கேட்டுகொண்டாராம். இதற்காக அழகிரி சொல்லியே மன்னன் முதல்வரை இரண்டு முறை சந்தித்து பேசி வந்துள்ளாராம்.

இது போக அமைச்சர் பி.மூர்த்தி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணி மாறன் ஆகியோரிடம் 29 வார்டுகள் உள்ளன.
மாநகரில் உள்ள மத்திய தொகுதியில் வென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர்கள் அளிக்கும் ஆதரவை பொருத்து மேயர் வேட்பாளர் யார் என்பது தெரியும். ஆளும் கட்சியில் இப்படி என்றால் எதிர்கட்சியில் அதை விட பலேவாக போட்டி. மதுரையில் அதிமுகவின் மூன்று அடையாளங்களில் முக்கியமாக பார்க்கப்படுபவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இவரது சிபாரிசின் பெயரில் தான் தலைமை மேயர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும். எப்படியும் தனது ஆதரவாளரை தான் அவரும் அறிவிக்க போகிறார் என்று எண்ணிய போது அவரும் ஒரு டுவிஸ்ட் வைத்தார். எதற்கு யாரோ நிற்க வேண்டும் எனது மகளையே மேயராக்கி விடுகிறேன் என்று கனவு கோட்டை கட்டி வருகிறார். இதனை நேரடியாகவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்யிடம் அறிவித்துவிட்டாராம்.

இதனை கேட்டு மதுரையின் மூன்று அடையாளங்களில் மற்றொருவரான ராஜன் செல்லப்பா. அவருக்கு மகள் இருந்தால் எனக்கு மருமகள் இல்லையா என்று தனது பங்கிற்கு அவரும் களம் இறங்கி உள்ளார். இவர் மட்டுமின்றி ஆர்.பி.உதயகுமாரும் தனது ஆதரவாளர் ஒருவருக்கு சீட் கேட்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் இருப்பதோ ஒரே ஒரு மேயர் பதவி அதற்கு இத்தனை போட்டி எதற்கு. அதிலும் ஆள் ஆளிற்கு தங்களது குடும்ப உறுப்பினர்களை களம் இறக்கி மகளா ? மருமகளா ? என மாமன்றத்தை பட்டிமன்றமாக போட்டி போட்டுக்கொண்டு மல்லுக்கட்டுகின்றனர். யார் பதவியை பிடித்தாலும் மதுரை மக்களின் பிரச்சனைக்கு என்று விடியல் பிறக்கும் என்று மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *