புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வருடாந்திர தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது,

புதுக்கோட்டை, அறந்தாங்கி கல்வி மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட அறிவியல் படைப்புகளை கொண்டு நடத்தப்படும் இக்கண்காட்சியில் இடம் பெறும் படைப்புகளில் இருந்து தனிவகையாக ஒரு மாணவர் மற்றும் ஆசிரியர் படைப்பும், குழு வகையாக இரண்டு மாணவர் மற்றும் ஆசிரியர் படைப்பும், ஆசிரியர் வகையாக ஒரு ஆசிரியர் படைப்பும் தேர்வு செய்யப்பட்டு 25-11-2026 அன்று வேலூர் மாவட்டம், காட்பாடி, சிருஷ்டி வித்யாஷ்ரம் , பிரம்மபுரம் என்ற இடத்தில் நடைபெறும் மாநில அளவிலான கண்காட்சியில் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறாக நமது மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான கண்காட்சிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியரின் படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இக்கண்காட்சியில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு தனிவகையில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் படைப்பினையும், குழுவகைவகையில் திருவப்பூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியின் படைப்பினையும், ஆசிரியர் வகையில் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் படைப்பும் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.
முன்னதாக வந்திருந்த அனைவரையும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் வரவேற்று பேசினார். இக்கண்காட்சி நிகழ்ச்சியில் பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, பள்ளியின் தலைமையாசிரியர்( பொ) தனலெட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர் .



