• Thu. Nov 19th, 2026

கோவையில் 32 ஆண்டுகள் பழமையான கடிகாரக் கோபுரம் புதுப்பொலிவுடன் திறப்பு!

BySeenu

Nov 19, 2026

​கோவை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும், வடக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் அமைந்துள்ள பழமையான கடிகாரக் கோபுரம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு இன்று கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 1994-ஆம் ஆண்டு முதன்முதலில் திறக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடிகாரக் கோபுரம், மாநகரின் அழகை மேலும் மெருகூட்டும் வகையிலும், பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையிலும் நவீன முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
​ரவுண்ட் டேபிள் இந்தியாவின் ‘ஆர்.டி.ஐ வாரம் 2026’ (RTI Week 2026) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கோவை மாநகர டேபிள்ஸ் (ஏரியா 7) சார்பில் இந்தச் சமூகப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் புனரமைப்புப் பணியில் கோவை ரவுண்ட் டேபிள் 9, கோவை நார்த் ரவுண்ட் டேபிள் 20, கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் 31, கோவை மெட்ரோபோலிஸ் ரவுண்ட் டேபிள் 62, கோவை பென்டா ரவுண்ட் டேபிள் 101, கோவை அக்மே ரவுண்ட் டேபிள் 133, கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மற்றும் கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் 323 ஆகிய எட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து தங்களது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளன.
​

தொழில் நகரமான கோவையின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ரவுண்ட் டேபிள் அமைப்பினர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு மாநகர மக்களிடையே பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.