• Sat. Nov 14th, 2026

சாய்ராம் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா..,

ByPrabhu Sekar

Nov 14, 2026

மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் 15-வது பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீ லியோ முத்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், 674 இளங்கலை மற்றும் 61 முதுகலை மாணவர்கள் என மொத்தம் 735 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். பெற்றோர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் பட்டமளிப்பு பேருரையாற்றிய விஸ்வ ஹிந்து கேந்திராவின் பொதுச் செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்ரி, சுவாமி விவேகானந்தரின் “எல்லா சக்தியும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்ற பொன்மொழியை மேற்கோள் காட்டி, வலுவான மனநிலையைக் கொண்டு நாட்டை உயர்த்த வேண்டும் என மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தார். மேலும், 10 துறைகளில் முதலிடம் பிடித்த 20 மாணவர்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான தங்கப் பதக்கங்களை வழங்கி அவர் கௌரவித்தார்.

தலைமையுரையாற்றிய சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் சாய் பிரகாஷ் லியோ முத்து, மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக உருவாக வேண்டும் என்றும், இளைய தலைமுறையினர் மூலமே பிரதமரின் விக்சித் பாரத் கனவை நனவாக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் மதிப்பில் லியோ முத்து கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.பழனிகுமார் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். இறுதியில் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.